இருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எரிச்சல் - இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா..? | Tamil247.info

இருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எரிச்சல் - இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா..?

எனது வயது 69. எனக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எரிச்சல் வருகிறது. கண்ணும் சூடேறுகிறது. இடுப்பில் ஜவ்வு மட்டும் விலகி மென்மையாக நரம்பு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறினார். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?

சி.சாகுல் அமீது, பழனி.

இடுப்பு தண்டுவடத்தில் வில்லைகள் நழுவி நரம்பு மண்டலத்தை அழுத்தும் நிலையில் கால்களில் அடிபாகத்தில் எரிச்சல், நடந்தால், நின்றால், உட்கார்ந்து படுத்தல் போன்ற நிலைகளிலும் இருகால்களிலும் பாதம் வரை வலியும் எரிச்சலும் ஏற்படக்கூடும். இதற்கு காரணமாக வயிற்றில் வாயுவின் சேர்க்கை, மலச்சிக்கல், குளிரூட்டப்பட்ட அறையில் நெடுநேரம் ஒரே நிலையில் அமர்ந்திருத்தல், நாற்காலியில் சாய்ந்து கால்களை நீட்டி முதுகு வளைத்து அமர்தல், இருசக்கர வாகனத்தில் குண்டும், குழியும் உள்ள சாலைகளில் ஏற்றி இறக்கிப் பயணித்தல், பேருந்தில் பயணம் செய்யும்பொழுது பின் பகுதியில் அதிகநேரம் நிற்க வேண்டிய நிலை, குளிர்ந்த நீரில் அடிக்கடி நீராடுதல், வயிற்றில் வாயுவின் சேர்க்கையை அதிகப்படுத்தும் கிழங்கு வகைகள், காரமான உணவுப்பொருட்களைச் சாப்பிடுவதில் ஆர்வம், சிற்றின்பத்தில் அதிகமான ஈடுபாடு, குஷன் போன்ற படுக்கையில் படுத்து உறங்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இடுப்பு நரம்பு அழுத்தத்தின் காரணமாக துன்பப்படுபவர்கள் மேற்குறிப்பிட்டக் காரணங்களைத் தவிர்த்து உணவு செயல் மற்றும் மருந்துகளில் கொண்டு வர வேண்டிய கவனங்களை மனதிற் கொண்டு நடைமுறைபடுத்த நீங்கள் குறிப்பிடும் உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

எளிதில் செரிக்கக் கூடிய வெதுவெதுப்பான நெய்ப்பு உள்ள புழுங்கலரிசியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சி வகைகள், பொங்கல், உளுந்தும் வெந்தயமும் சேர்த்தரைத்த தோசை, கருவேப்பிலைத் துவையல், தேங்காய் சட்னி, சின்ன வெங்காயம், முருங்கைக்காய் சேர்த்த சாம்பார் ஆகியவற்றைக் காலை உணவாகச் சாப்பிடுதல், இடுப்பு தண்டுவடத்தை வலுப்படுத்தும் நல்லதொரு உணவுமுறையாகும். மதியம் பிரண்டைத் துவையல், வெங்காயம், தக்காளி சேர்த்த சட்னி, நெல்லிக்காய் தயிர் பச்சடி, மிளகு, சீரகம் பூண்டு சேர்த்தரைத்த ரசம், ஆட்டுக்கால் சூப்பு, புளிப்பான தயிர் சாதம், போன்றவற்றை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் எலும்பிலிருந்து உறிஞ்சப்படும் மஜ்ஜை, முட்டை, சிக்கன் வகையறாக்களை கோதுமையைக் கொண்டு தயாரிக்கப்படும் சுக்கா ரொட்டியுடன் சாப்பிடுவதும் நல்லதே.


இரவில் படுக்கும் முன் சூடான ஒரு கிளாஸ் (300 மில்லி லிட்டர்) பசும்பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து அமுக்கரா சூரணத்தை ஒரு டீ ஸ்பூன் (5 கிராம்) அதில் சேர்த்து சாப்பிடுவதின் மூலமாக இடுப்பு எலும்புகளின் இடையே அமைந்துள்ள வில்லைப் பகுதிகளை நன்றாக வலுப்படுத்திக் கொள்ளலாம்.
இடுப்பில் விளக்கெண்ணெய்யை சூடாக்கித் தடவிவிட்டு வெந்நீர் விட்டு நீராடுதல், மலச்சிக்கல் ஏற்படாத வகையில் நார்ச்சத்துள்ள காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல், வாயுவின் சேர்க்கையை குடலில் இருந்து தவிர்ப்பதற்காக செய்து கொள்ளக் கூடிய எனிமா சிகிச்சைமுறைகள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டிய கஷாயம் மற்றும் மாத்திரை மருந்துகள் ஆகியவற்றின் மூலமாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள எரிச்சல் உபாதையைப் போக்கிக் கொள்ளலாம். தங்களுடைய கடிதத்தில் கண்ணில் எரிச்சல் உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். கணினி முன்பு அமர்ந்து அதிக நேரம் வேலை செய்வதன் மூலமாகவும், அதிக நேரம் தொலைக்காட்சி காண்பதன் மூலமாகவும் ஏற்படும் கண் எரிச்சல் நீங்க திரிபலா சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து ஒன்றரை ஸ்பூன், அரை ஸ்பூன் நெய் குழைத்து இரவு படுக்கும் முன் சாப்பிட்டு அதன் மேல் பால் சாப்பிட்டு படுத்துறங்குவது நல்லது.

இடுப்பு தண்டுவடப்பகுதியில் செய்யப்படும் கடிவஸ்தி எனும் சிகிச்சைமுறை இலை ஒத்தடம், ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் வஸ்தி சிகிச்சை, நாடீ ஸ்வேதம் எனப்படும் மூலிகை வேர்களால் உண்டாக்கப்படும் நீராவிக் குளியல் சிகிச்சை போன்றவை உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
foot pain irritation, paadha erichal paadha vali ayurveda maruthuvam, tamil maruthuvam, natural medicine for foor pain anf feet irritable sensation, malachikkal paadha vali , kaal vali nivaranam

இந்த 'இருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எரிச்சல் - இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா..? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எரிச்சல் - இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா..?
Tamil Fire
5 of 5
எனது வயது 69. எனக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் எரிச்சல் வருகிறது. கண்ணும் சூட...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment